Bharathi Ilakkiya Payilagam

Bharathi Ilakkiya Payilagam
Bharathi Ilakkiya Payilagam

Saturday, December 22, 2012

உன் பெயர் சொல்லி வாழ்வோம்!


உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

11-12-2012 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதி நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு இயக்கத்தார் நடத்திய மூன்று நாள் பாரதி விழாவில், அப்போதே சொல்லி கவிபாட வைத்தனர். அப்போது நான் எழுதி வாசித்த கவிதை (?) இது. பிழை இருந்தால் பொருத்தருள்க!


                                        உன் பெயர் சொல்லி வாழ்வோம்!

எட்டப்பன் செய்த துரோகச் செயலுக்கு
ஈடுசெய்ய நினைத்தானோ இறைவன் இன்று!
கரிசல்மண் நிறைந்த தென்பாண்டிபூமியிலே, பாரதி!
பெருமைமிகு குடியிலே உன்னைப் பிறக்கவைத்தான்! 1.

அச்சமில்லை என்றுசொல்லி மனத்துள் அச்சம்நீக்கி
இச்சைமிகு வாழ்க்கைமுறை அறவே நீக்கி
உச்சியிலே விடுதலையின் விதை விதைத்து
அச்சமின்றி தலை நிமிர்ந்து வாழவைத்தாய்! 2.

காலனை அழைத்துச் சற்றேமிதிப்பேன் என்றாய்!
காளியிடம் சென்றென்னைச் சோற்றுக்கு அலையவிட்டால்
பாடவே மாட்டேனுன்னை, நாத்திகனாய்விடுவேன் என்று
சூளுரைத்த உந்திறத்தை என்னவென்று நானுரைப்பேன்! 3.

என்ன அவசரமோ? இளமையிலே மாண்டுபோனாய்!
அந்தணனாம் சங்கரனும், அயோத்தியின் இராமபிரான்
கண்ணபிரான் முதலான அனைவருமே மாண்டபோதும்
நான்மட்டும் சாகாமல் இருந்திடுவேன் என்றாய்! 4.

தேடிதினம் சோறுதின்று ஒயாமல் சுகத்தை நாடும்
வேடிக்கை மனிதர்களின் முகத்திரையை நீகிழித்தாய்!
சின்னஞ்சிறு கதைகள்பேசி துன்பத்தைப் பிறர்க்குத் தந்து
கூற்றுக்கு இரையாகப் போவோரைச் சாடுகின்றாய்! 5.

பிறர்துன்பங் கண்டுமனம் வாடுபவன் புண்ணியனாம்
ஊருக்கு உழைத்திடுதல் யோகத்தின்பாங்கு என்றாய்,
ஊர்நன்மை நாடுவதே யாகம்எனச் சொல்லியென்றன்
வேருக்கு நீர்வார்த்த வழிகாட்டி நீயன்றோ? 6.

குப்பையிலே குருக்கத்திப் பூமலர்ந்தார்ப் போல்
கெளரவர் குலத்துதித்த விதுரன் பெருமைசொல்லி
ஏச்சாலும், இழிவாலுமவன் நிலைகுலையா குணம்சொல்லி,
ஏற்றமிகு நீதியை உலகுக்கு எடுத்துரைத்தாய்! 7

நரம்பெல்லாம் முறுக்கேற மனத்துள் உரமூட்டி
எரிதழலால் உள்ளத்து தீமையெல்லாம் எரித்திட்டாய்
ஊருக்கு நல்லவையும் உண்மையையும் எடுத்துச்சொன்னாய்
பேருக்கு வாழாமல், பாரதியே! பார்வாழ வாழ்ந்திட்டாய்! 8.

வாழ்க நீயே!

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்.

No comments:

Post a Comment

You can send your comments